துடியலூர் சிறுமி வீட்டிலிருந்து பெற்றோரால் திருப்பி அனுப்பப்பட்டாரா ஸ்டாலின்?

கோவை துடியலூரில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு ஆறுதல் கூற ஸ்டாலின் சென்ற போது குழந்தையின் பெற்றோர் “அரசியல் செய்ய நாங்கள்தான் கிடைத்தோமா?” என்று அவரை திருப்பி அனுப்பியதாக tnnews24.com தளம் மற்றும் Tamilnadu social media என்ற பேஸ்புக் பக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

மெய்ப்பொருள்:

துடியலூர் சிறுமி வீட்டிலிருந்து பெற்றோரால் ஸ்டாலின் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது பொய்யான செய்தி ஆகும்.

ஸ்டாலின், ஆ.ராசா மற்றும் திமுகவினருடன் கடந்த 2ஆம் தேதி துடியலூர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று அக்குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அது அப்போதே செய்திகளில் வந்துள்ளது. ஸ்டாலின் அங்குச் சென்ற போது வீட்டிற்குள் இருக்கும் ஒருவர் எடுத்த காணொளியைக் கடந்த 6ஆம் தேதி பேஸ்புக்கில் “அரசியல் செய்ய நாங்கள்தான் கிடைத்தோமா ஸ்டாலின் விரட்டி அடிப்பு” என்று தலைப்பிட்டுப் பகிர்ந்துள்ளது Tamilnadu social media என்ற பக்கம். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் tnnews24.com தளமும் கட்டுரையை எழுதியுள்ளது.

வீட்டிற்குள் ஸ்டாலின் வந்தவுடன் குழந்தையின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அந்த சமயத்தில் குழந்தையின் பெற்றோரும் அழைக்கப்பட்டனர். ஸ்டாலின் மாலை அணிவிக்கும் போது பின்னணியில் புகைப்படம் எடுக்கும் சத்தம் கேட்கிறது. இதைக்  கவனித்த வீட்டிற்குள் இருக்கும் வேறு பெண்மணி ஒருவர் (குழந்தையின் பெற்றோர் ஸ்டாலினுக்கு அருகில் இருக்கிறார்கள்) புகைப்படம் எடுப்பது பத்திரிக்கையாளர்கள் என்று கருதி, “குழந்தையைப் பற்றி தவறான செய்திகளை வெளியிடவா புகைப்படங்களை எடுக்கிறீர்கள்” என்று கேட்கிறார். அவர்
அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே பெற்றோர் அருகிலிருக்க மாலையை அணிவித்துவிட்டு வெளியேறுகிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் சென்ற போது எடுத்த காணொளி இதுதான்:

ஏப்ரல் 6 அன்று சபரிமாலாவுடன் இருந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் குழந்தையின் பெற்றோர் இப்படி ஒரு குற்றச்சாட்டு வைப்பதாக அக்குழந்தையின் அம்மாவின் முன்னிலையில் சபரிமாலாவும் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதைக் கீழே உள்ள காணொளியில் காணலாம்.

வீட்டிற்குள் வந்து புகைப்படம் எடுப்பவர்கள் பத்திரிக்கையாளர்கள் எனக்கருதி ஒரு பெண்மணி பேசியதைத் திரித்து குழந்தையின் பெற்றோர் திருப்பி/விரட்டி ஸ்டாலினை அனுப்பியதாகச் செய்தி வெளியிட்டுள்ளனர் tnnews24.com தளம் மற்றும் Tamilnadu social media பேஸ்புக் பக்கம்.

tnnews24.com வெளியிட்டுள்ள செய்தி:

இதே tnnews24 இதற்கு முன்பே விஜய் சேதுபதி-பகவத்கீதை விஷயத்திலும் செய்தியைத் திரித்து வெளியிட்டது. அதே போல நண்பன் கொடுத்த பொங்கலைச் சாப்பிட்ட 8 வயது மகனை அடித்து வெளுத்த அக்பர் அலி என்று பொய்யாக ஒரு செய்தியையும் வெளியிட்டதை நாங்கள் பகிர்ந்திருக்கிறோம்.