நண்பன் வீட்டில் பொங்கல் சாப்பிட்ட மகனை அடித்தாரா முஸ்லீம் தந்தை? 

tnnews24.com என்ற தளத்தில் இலங்கையில் இந்து நண்பன் வீட்டில் பொங்கல் சாப்பிட்டதற்காக அக்பர் அலி என்ற இஸ்லாமிய தந்தை தனது மகன் அகமதுவை அடித்து வெளுத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இது நாச்சியார் தமிழச்சி, Namhindu – நாம் இந்து, True Or Fake என்ற பேஸ்புக் பக்கங்கள் உட்பட பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

மெய்ப்பொருள்:

tnnews24.com தளத்தில் பகிரப்பட்டுள்ள செய்திக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படத்தில் அம்புக்குறியிடப்பட்டு காட்டப்பட்டிருக்கும் பகுதி 2005ஆம் ஜனவரி மாதம் அப்போதைய ஐ.நா சபை செயலாளராக இருந்த கோபி அன்னான் இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்திருந்த போது கிண்ணியா மத்திய கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களில் முஸ்லீம் நபர் ஒருவருடன் இருந்த புகைப்படமாகும்.

அத்தோடு இந்த செய்தி  நிறைய பேரால் பேஸ்புக் தளத்தில் பகிரப்பட்டு வருவதாகவும், இதை முதலில் பகிர்ந்தவர் அகமதுவின் நண்பன் மணிகண்டனின் அண்ணன் என்றும் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து நாம் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பேஸ்புக்கில் தேடிய போது செய்தி குறித்து tnnews24.com மற்றும் அதில் இருந்து காபி,பேஸ்ட் செய்யப்பட்ட பதிவுகளை தவிர வேறு எதுவுமே இல்லை. இதை நாம் இலங்கை செய்திகளை வெளியிடும் தளங்களில் தேடிய போதும் பலனில்லை.

tnnews24.com தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் மற்ற செய்திகளை சோதித்த போதும் இதே போல எந்த விட அடிப்படையும் இல்லாமலும், செய்தியின் உண்மைத்தன்மையை நிரூபிக்க எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இன்னும் பல செய்திகளை காண முடிந்தது. இந்நிலையில் இந்த தளத்தில் செய்திகளை எழுதும் நபரின் பின்னணியை தேடிய போது நமக்கு கிடைத்த பெயர் Uthayakumar S. பேஸ்புக்கில் Uthayakumar என்ற பெயருடன் இயங்கி வரும் இவர் பெரும்பாலும் இந்துத்துவா, பிஜேபி குறித்த செய்திகளையே பகிர்ந்து வருவதும் நம்மால் பார்க்க முடிந்தது. அத்தோடு Rashtriya Nationalist Bharat Chennai என்ற அமைப்பின் ஐடி விங்கில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Sources:

Kofi Annan consoles Trinco Tamil, Muslim Tsunami victims

recoveryplatform.org [page 18]