இளம் குற்றவாளிகள் வயது வரம்பை 16ஆக குறைப்பதை எதிர்த்தாரா கனிமொழி?

டெல்லி நிர்பயா வழக்கைத் தொடர்ந்து மைனரைத் தண்டிக்க வயது வரம்பை 16 ஆகக் குறைக்க மத்திய அரசின் சட்டத்திருத்த மசோதா தாக்கலின் போது அந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, இளைஞர்களைத் தண்டிக்கக் கூடாது என்று கூறி அதை எதிர்த்து கனிமொழி அரை மணி நேரம் வாதிட்டார் என பாஜக ஆதரவாளர்கள் பலரும் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

kanmozi Juvenile Justice bill news

kanmozi Juvenile Justice bill news

மெய்ப்பொருள்:

டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளி ஒருவர் 18 வயதிற்குக் குறைவானவர் என்பதால் 3 ஆண்டு சிறார் சீர்திருத்தப் பள்ளி வாசம் முடிந்து டிசம்பர் 20, 2015 விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக மத்திய அரசு குற்றவாளிகளின் வயது வரம்பை நிர்ணயிக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வகை செய்யும் மசோதாவைக் கொண்டு வந்தது. டிசம்பர் 22, 2015 மாநிலங்களவையில் இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சட்டத்திருத்தத்தின் படி கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயதுள்ளவர்களை இளைஞர்களாகக் கருதி அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க இந்த மசோதா வகை செய்யும்.

இந்த விவாதத்தில் பங்கேற்று 9 நிமிடங்கள் பேசிய கனிமொழி, Sex Trafficking தொடர்பான ஒரு சிறுமியின் வழக்கு மற்றும் சில விஷயங்களை குறிப்பிட்டு, நம் நாட்டில் போதுமான அளவிற்கு வசதிகள் (நீதிமன்றங்கள், மருத்துவர்கள், நீதிபதிகள் மற்றும் பல) இல்லாத சூழ்நிலையில் அவசர கதியில் இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்வது சரியாக இருக்காது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அதே சமயத்தில் குழந்தைகளின் வருங்காலமும் மிகவும் முக்கியமானது. எனவே இதை ஒரு Select Committeeக்கு அனுப்பி, விவாதித்து அதன் பின்னர் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கனிமொழி இந்த விவாதத்தில் குறிப்பிட்ட முக்கியமான விசயம் எதற்காக உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது தான்.

அவர் டிசம்பர் 22, 2015 அன்று ராஜ்யசபாவில் பேசியதைக் கீழே உள்ள காணொளியில் காணலாம்.

நிறைய விவாதித்து, சரியான புரிதலுடன் இந்த சட்டத்திருத்தை கொண்டுவருவது தான் சரியாக இருக்கும் என்று கனிமொழி பேசியதை மாற்றி இளைஞர்களை தண்டிக்கக் கூடாது என்று எதிர்த்து பேசினார் என பகிர்ந்து வருகின்றனர் பிஜேபி ஆதரவாளர்கள்.