எரித்திரியா நாட்டில் ஆண்கள் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறையா?

பேஸ்புக்கில் கடந்த சில வருடங்களாகவே பரவி வரும் ஒரு செய்தி ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் கண்டிப்பாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது. கடந்த பல ஆண்டுகளாக எரித்திரியாவில் நிகழ்ந்த போரினால் அங்கே ஆன்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது எனவே அவ்வாறு செய்ய மறுத்தால் சிறை தண்டனை என அதற்கு காரணம் கூறப்பட்டது. தினத்தந்தி, மாலைமலர் உள்ளிட்ட தளங்களில் கூட இந்த செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் உண்மை என்ன?

மெய்ப்பொருள்:

கிட்டதட்ட 2016ஆம் ஆண்டில் இருந்தே பகிரப்பட்டு வரும் இந்த செய்தி முதலில் ஆப்பிரிக்க நாட்டு மீடியாக்களில் பகிரப்பட்டு பின்னர் தமிழில் பரவி இருக்கிறது. இதுகுறித்து சஹாரா ரிப்போர்ட்டர்ஸ் என்ற தளம் அப்போதே ஐநா சபையில் இருக்கும் எரித்திரிய நாட்டின் அரசு அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது இது உண்மையல்ல என்று அவர் மறுத்திருக்கிறார்.

கனடாவின் குயின்ஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றும் Awet Weldemichael என்ற உதவி பேராசிரியரும் இது பொய் என்பதை உறுதிபடுத்தி இருக்கிறார். எரித்திரியாவில் BA வரலாறு படித்த இவர் தற்போது ஆப்பிரிக்க மற்றும் உலக வரலாறு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் அவர், இந்த செய்தியை நன்றாக கவனித்தாலே தெரியும் எரித்திரிய பாரம்பரியம் குறித்த எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் தான் பகிரப்பட்டு வருகிறது என்பது. எரித்திரிய மக்கள் தொகையில் பாதி பேர் கிறித்தவர்கள், பாதி பேர் இஸ்லாமியர்கள்.”அவர்களின் நம்பிக்கைகள் பலதார மணத்தை ஆதரிப்பது இல்லை” என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளனர் எரித்திரிய மக்கள் என்றும் கூறியுள்ளார்.

Source: FACT CHECK: Reports That Eritrean Law Requires Men To Marry Two Wives Are False