நீட் தேர்வால் ஏழை மாணவிக்கு சீட் என பரவும் பொய்யான செய்தி

திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நீட் தேர்வு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், “தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த இப்பெண்ணுக்கு நீட் மூலம் மருத்துவகல்வி சீட் கிடைத்துள்ளது…நீட் இல்லாவிட்டால் பணக்காரனுக்கு மட்டுமே மருத்துவகல்வி.அதற்காக தான் கல்வி வியாபாரிகள் கூவுகின்றனர்…” என்ற பதிவு ஒரு மாணவியுடன் புகைப்படத்துடன் Nellai Samidurai என்பவரால் பேஸ்புக்கில் பகிரப்பட்டு உள்ளது. இதை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் டைம்லைனிலும் பகிர்ந்துள்ளனர்.

மெய்ப்பொருள்:

புகைப்படத்தில் உள்ள மாணவியின் பெயர் பெயர் பிருந்தா தேவி, இவர் நீட் தேர்வு எழுதி மருத்துவப்படிப்புக்கு தேர்வானவர் இல்லை. நீட் தேர்வு தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே 2016 ஆண்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்குத் தேர்வானவர்.̀

திருச்சி மாவட்டம் மேலக்குழுமணியை சேர்ந்த முத்துவீரன் – மலர்கொடி ஆகியோரின் மூத்த மகளாகிய பிருந்தாதேவி ஏழ்மையான சூழ்நிலையால் மருத்துவம் படிக்க அரசு கல்லூரியில் இடம் கிடைத்தும் ஆகஸ்ட் மாதம் கல்லூரி தொடங்கவிருந்த நிலையில் ஜூலையில் தனது தாயிற்கு உதவியாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அந்த ஆண்டு இவர் கலந்தாய்வில் கலந்துகொள்ள ரூ.10,500 மற்றும் விடுதி கட்டணம் உள்பட ரூ.9,000, இதர கட்டணம் ரூ.2,000 என ரூ.21,500 கிராம மக்களும், ஆசிரியர்களும் கொடுத்து உதவி உள்ளனர். இந்த செய்தி ஜூலை 15, 2016 தினகரனில் செய்தியாக வெளியாகி உள்ளது.

இவரின் குடும்ப சூழ்நிலையைக் கருதி மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிருந்தாதேவி வேண்டுகோளும் விடுத்திருந்தார். ஏழ்மை காரணமாக, அவரது மருத்துவப்படிப்பு தடைப்படக்கூடாது என்று பிருந்தாதேவியின் முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உள்பட மொத்தம் ரூ.50 ஆயிரத்தை “புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்டில்’ இருந்து வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார். இந்த செய்தி தினமணி இணையதளத்தில் ஜூலை 18, 2016இல் வெளியாகியுள்ளது.

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மாணவர் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

நீட் தேர்வு தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே மருத்துவப்படிப்புக்கு தகுதி பெற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் ஏழை மாணவியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, அவர் நீட் தேர்வு மூலம் மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்ததாகப் பொய்யான செய்தியைப் பகிர்ந்து வருகின்றனர்.

Sources:

வாட்டும் வறுமையால் ஆடு மேய்க்கும் எம்பிபிஎஸ் மாணவி படிக்க வசதியின்றி தவிப்பு

ஏழை மாணவியின் உயர்கல்விக்கு உதவிய முதல்வர்!

List of Students – M.B.B.S. ,2016 – Government Thiruvarur Medical College,thiruvarur

Tags: